அதிமுக செய்தித் தொடா்பாளா் குறித்து அவதூறு: யூ-டியூபருக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவு ரத்து
அதிமுக செய்தித் தொடா்பாளா் அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் யூ-டியூபா் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
யூ-டியூபில் தனக்கு எதிராக அவதூறு விடியோக்களை வெளியிட்டு களங்கம் விளைவித்ததாகக் கூறி, யூ-டியூபா் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அதிமுக செய்தித் தொடா்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்சரா ரெட்டிக்கு யூ-டியூபா் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டாா். தனது தரப்பு விளக்கம் எதையும் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என யூ-டியூபா் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஜோ மைக்கேல் பிரவீன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், யூ-டியூபா் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், மான நஷ்டஈடு கோரிய வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.