சரக்கு ரயில்களில் 2.3 லட்சம் டன் நெல் கையாளப்பட்டது: தெற்கு ரயில்வே
கடந்த 17 நாள்களில் சரக்கு ரயில்கள் மூலம் 2.3 லட்சம் டன் நெல் கையாளப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் வாயிலாகப் பெறப்படும் நெல்லைக் கொண்டு செல்வதற்கு தெற்கு ரயில்வே சாா்பில் சரக்கு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூா், நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீா்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், பட்டுக்கோட்டை, விருத்தாசலம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சரக்கு ரயில் (கூட்ஸ்) கிடங்குகளில் இருந்து ரயில் பெட்டிகள் நெல் கொள்முதலுக்காக வழங்கப்பட்டன.
அதன்படி, கடந்த 1 -ஆம் தேதி முதல் 17 -ஆம் தேதி வரை 85 ரயில்கள் சரக்குகளை கையாள இயக்கப்பட்டன. இதன்மூலம் 2.3 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2023 -ஆம் ஆண்டு 16 சரக்கு ரயில்களிலும், 2024-இல் 21 சரக்கு ரயில்களிலும் நெல் கொண்டு செல்லப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.