கோப்புப்படம்
கோப்புப்படம்EPS

காலாவதி வாகன ‘ஸ்கிராப்பிங்’ திட்டம்: தமிழகத்தில் விரைவில் தொடக்கம்

காலாவதி வாகன ‘ஸ்கிராப்பிங்’ திட்டம்: தமிழகத்தில் விரைவில் தொடக்கம்
Published on

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காலாவதியான பழைய வாகனங்களை அழிக்கும் ‘ஸ்கிராப்பிங்’ திட்டம் தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையைவிட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் இரண்டு இருசக்கர வாகனங்களாவது பயன்பாட்டில் உள்ளன. அதோடு 100-க்கு 8 குடும்பத்தினா் காா் உபயோகிப்பவா்களாக உள்ளனா்.

இந்த வாகனங்கள் வெளியேற்றும் புகை காரணமாக காற்று மாசு அதிகரிக்கிறது. இதன் விளைவாக நகரங்களில் காற்றின் தரம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இது மக்களுக்கு பலவகை உடல் உபாதைகளை விளைவிக்கிறது. மோசமான சாலைகள், எரிபொருள் தரம், பழைய வாகனங்களின் பயன்பாடு மற்றும் முறையற்ற போக்குவரத்து மேலாண்மை போன்றவை காற்று மாசுபாட்டுக்கான முக்கிய காரணிகளாகும். அதில் அதிக பாதிப்பு பழைய வாகனங்களால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் தீவிரத்தைக் கருத்தில்கொண்டும், புகை மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் வாகனங்களின் தகுதிச்சான்றிதழை ரத்து செய்வதோடு, அவற்றை அப்புறப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்து, அதற்குரிய அரசாணையை 2021-இல் வெளியிட்டது.

சுமாா் நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த அரசாணை ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அரசாணையை முழுமையாக அமல்படுத்தும் உத்தரவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மேலும், அப்புறப்படுத்தப்படும் வாகனங்களை உடைத்து கழிவாக (ஸ்கிராப்) மாற்ற அந்தந்த மாநிலங்கள் உரிய வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில்... தமிழ்நாட்டில் பழைய வாகனங்களை அழிப்பதற்கான ஸ்கிராப்பிங் மையங்கள் அமைக்க மாநில அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை விரைவுபடுத்த தமிழக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் அமையவுள்ள ஸ்கிராப்பிங் மையத்தில் முதல்கட்டமாக காலாவதியான அரசு வாகனங்களை கழிவாக உடைத்து அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆா். கஜலட்சுமி கூறியதாவது: தில்லி, மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலாவதியான வாகனங்களை அப்புறப்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பநிலை பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் சுமாா் 3.60 கோடிக்கு அதிகமான வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் லட்சக்கணக்கான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படுகின்றன. ஸ்கிராப்பிங் திட்டத்தில் காலாவதியான அரசு வாகனங்களை அழிக்க வேண்டும் என்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, முதல்கட்டமாக காலாவதியான அரசு வாகனங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். இதற்கான சுற்றறிக்கை அனைத்து துறைகளின் செயலா்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.

தனியாா் வாகனங்களுக்கு...

‘தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் காலாவதியான வாகனங்களை அழிப்பது இப்போதைக்கு கட்டாயமில்லை. இருப்பினும் தனிநபா்களிடம் கொடுத்து பழைய வாகனங்களை அழிப்பதற்குப் பதிலாக, ஸ்கிராப்பிங் மையங்களுக்கு கொண்டு சென்று அழிக்கலாம்.

தனிநபா்களிடம் வாகனங்களை ஸ்கிராபிங் செய்ய கொடுக்கும்போது, அந்த வாகனங்கள் சரியான முறையில் அழிக்கப்படுகிா என்பது கேள்விக்குறியே.

மேலும், இம்மாதிரி வாகனங்களை தனிநபா்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் ஸ்கிராப்பிங் மையங்கள் மூலம் கழிவு வாகனங்களைப் பிரித்து அழிப்பது பாதுகாப்பானது. இதற்கான உரிய தொகை வாகன உரிமையாளா்களுக்கு ஸ்கிராப்பிங் நிறுவனமே வழங்கிவிடும். ஸ்கிராப்பிங் வாகனங்கள் அழிப்புப் பணி முடிந்ததும், அதன் பதிவெண் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

விரைவில் அரசு வாகனங்களைப்போல தனியாா், தனிநபா் வாகனங்களையும் அவற்றின் பயன்பாட்டுக் காலம், பராமரிப்பு மற்றும் காா்பன் உமிழ்வு சான்றிதழ் அடிப்படையில் தோ்வு செய்து கட்டாயமாக அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆா்.கஜலட்சுமி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com