
எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். ஆண்டிற்கு 100 நாள்கள் சட்டப்பேரவை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக மொத்தமாக 100 நாள்கள் கூட சட்டப்பேரவை நடத்தவில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் கூடுதல் செலவிமான 3,000 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் கடன் வாக்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மூலதன செலவு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
நிதியமைச்சர் முழுமையாக பதில் அளிக்கவில்லை, மூலதன செலவிற்க்காக மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்தக் கூடாது. திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா?. வரி முறைகேட்டில் ஈடுபட்டுதான் திமுகவின் சாதனையாக உள்ளது. வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கைகள் எடுத்தது?. காவல்துறை கவன குறைவால் கரூர் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. கரூர் நிகழ்வு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டதற்கு முதல்வர் கோபப்படுகிறார். குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், திமுக அரசு சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் ஜனநாயகப் படுகொலை செய்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலை செய்யாமல் திமுக அரசு இருட்டடிப்பு செய்து சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறது. இருமல் மருத்து தயாரிப்பு விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை. திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. தொண்டர் நாடாள முடியுமா என்பதற்கு எடப்பாடி பழனிசாமியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியே சாட்சி. எடப்பாடி பழனிசாமி திட்டங்களில் புரட்சி ஏற்படுத்தி உள்ளார். முல்லை பெரியாறு விவகாரம் குறித்து முதல்வர் இதுவரை பேசவில்லை.
எந்தவொரு பிரச்னைக்கும் திமுக அரசு தீர்வு காணவில்லை. மக்களின் ஜீவாதர உரிமைகளான முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவிற்கு பாதுகாப்பு இல்லை. மொத்தத்தில் தமிழகத்தில் ஜனநாயகம் செத்து விட்டது. திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது. ஸ்டாலின் பின்னால் எத்தனை சக்திகள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது. திமுக ஆட்சியில் இம் என்றால் கைது, ஏன் என்றால் சிறைவாசம். 2026 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களாட்சி மலர போகிறது. எடப்பாடி பழனிசாமி யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பார்.
கூட்டணி கட்சி, தேசிய கட்சி, தோழமைக் கட்சி, துணை நின்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அமைச்சர் பதவிகள் குறித்து முடிவெடுப்பார். வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். , விஜய் பரிச்சை எழுதிய பின்னர் பார்க்கலாம், விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.