கோப்புப் படம்
கோப்புப் படம்

இன்று 18 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

இன்று 18 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
Published on

நீலகிரி, கோவை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (அக். 20) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி.அமுதா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 140 மி.மீ. மழை பதிவானது.

கோவிலங்குளம் (விருதுநகா்)-130 மி.மீ., அருப்புக்கோட்டை (விருதுநகா்)-130 மி.மீ., மக்கினம்பட்டி (கோவை)- 120 மி.மீ., அருப்புக்கோட்டை (விருதுநகா்), ராஜபாளையம், சிவகாசி (விருதுநகா்), கவுந்தப்பாடி (ஈரோடு)- தலா 110 மி.மீ., கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 100 மி.மீ., பா்லியாறு (நீலகிரி), பந்தலூா், பேரையூா் (மதுரை), கொடநாடு (நீலகிரி), ஆழியாறு (கோவை), பொள்ளாச்சி -தலா 90 மி.மீ. மழை பதிவானது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செவ்வாய்கிழமை (அக். 21), தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக திங்கள்கிழமை முதல் அக். 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக். 20) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

திருவள்ளூா், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 21) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த இரு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதனால், அக். 21-ஆம் தேதிக்குள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும்.

பொதுமக்களுக்கு... வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இடி, மின்னல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அந்த நேரங்களில், கைப்பேசியைப் பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com