
பெங்களூரு - ஒசூர் மெட்ரோ திட்டம் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்று கர்நாடக அரசிடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் (பிஎம்ஆர்எல்) தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசிடம் கொடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில், இரு மாநிலங்களின் மெட்ரோ நிர்வாகங்களும் வெவ்வேறு மின்சார கட்டமைப்புகள் மூலம் ரயில்களை இயக்கி வருவதால் சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஒசூரில் இருந்தும், ஒசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பெங்களுரூவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்னிந்தியாவில் இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை தமிழ்நாடு - கர்நாடகம் இடையே செயல்படுத்த தீவிர ஆலோசனைகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனமும் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சென்னை மெட்ரோ நிறுவனமும், கர்நாடக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெங்களூரு மெட்ரோ நிறுவனமும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கான வழித்தடம், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை தொடர்பான வரைவு திட்டம் வெளியாகி பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், பெங்களூரு - ஒசூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமில்லை என்று கர்நாடக அரசிடம் சமர்பித்த திட்ட அறிக்கையில் பிஎம்ஆர்எல் தெரிவித்துள்ளது.
ஏன் சாத்தியமில்லை?
பெங்களூரு மெட்ரோ நிறுவனம் அனைத்து வழித்தடங்களிலும் 750 வோல்ட் டிசி உயர்மட்ட கேபிள் வசதியில் ரயில்களை இயக்கி வருகின்றது.
இதே தொழில்நுட்பத்தில் பொம்மசந்திரா முதல் அத்திப்பள்ளி இடையிலான வழித்தடத்திலும் பயன்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை மெட்ரோ நிறுவனம் 25 கிலோ வோல்ட் ஏசி உயர்மட்ட கேபிள் வசதி மூலம் ரயில்களை இயக்கி வருகின்றது. ஓசூர் – பொம்மசந்திரா இடையிலான 23 கிலோமீட்டர் தொலைவுக்கும் இதே தொழில்நுட்பத்தில் இயக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனால், இரு தொழில்நுட்பங்களையும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளே இறுதி முடிவை எடுக்கும் என்று பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.