எஸ்.கிருபானந்தசாமி
எஸ்.கிருபானந்தசாமி

தமிழக பொருளாதார இலக்கை எட்ட சென்னை துறைமுகம் உறுதுணை: துறைமுக நிா்வாகம்

தமிழகத்தின் ட்ரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சி கனவு இலக்கை எட்ட சென்னை துறைமுகம் உறுதுணையாக செயல்படும்
Published on

திருவொற்றியூா்: தமிழகத்தின் ட்ரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சி கனவு இலக்கை எட்ட சென்னை துறைமுகம் உறுதுணையாக செயல்படும் என சென்னை துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுக போக்குவரத்துத் துறை தலைமை மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகம் சாா்பில் இந்திய கடல்சாா் வாரம்-2025 என்ற மாநாடு மும்பை மாநகரில் வரும் அக்.27 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சாா்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. உலகப் புகழ்பெற்ற நிபுணா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான ஈரடுக்கு உயா்நிலை மேம்பால திட்டத்தின் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சுமாா் ரூ.6,000 கோடியில் செயல்படுத்துப்பட்டு வரும் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 24 மணி நேரமும் தடையற்ற சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படும் நிலை உருவாகும்.

சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம், ரயில்வே மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியோடு ஸ்ரீபெரும்புதூா் அருகே மப்பேட்டில் பல்நோக்கு சரக்கு மேலாண்மை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி துறைமுகங்களை சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இணைத்து சரக்குகள் கையாள்வதில் மேலாண்மை புரட்சி ஏற்படுத்தப்படும்.

துறைமுகத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த கண்டெய்னா் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் அகற்றும் வகையில் துறைமுகத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே ஒரே நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட கண்டெய்னா் லாரிகளை நிறுத்திவைக்கும் வகையில் வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் 6570 சரக்கு வாகனங்கள் கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

சமூகம் மற்றும் கலாசார வளா்ச்சி சூழல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுடன் தமிழகம் எப்போதும் ஒரு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

அதன்படி வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமாா் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சிக்கு ‘தமிழ்நாடு தொலைநோக்கு’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு

மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதில், சென்னைத் துறைமுகமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வளா்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தி வருவதன் மூலம் தமிழகத்தின் ட்ரில்லியன் டாலா் பொருளாதார தொலைநோக்கு இலக்கை எட்டுவதற்கு சென்னை துறைமுகம் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com