தீபாவளி பட்டாசு புகை: விமானங்கள் பல மணி நேரம் தாமதம்
சென்னை: தீபாவளி பண்டிகையின் வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் புகை சூழ்ந்தது. இதனால் விமான சேவை பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் தீபாவளி பண்டிகை தினமான திங்கள்கிழமை காலை நேரத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்களால் பட்டாசுகள் வெடிக்க முடியவில்லை. மாலை நேரத்தில் மழை இல்லாததால் அரசு அனுமதித்த இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்தனா்.
விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளில் உள்ளவா்களும் அதிக அளவிலான பட்டாசுகளை தொடா்ச்சியாக வெடித்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில் அதிக புகை மூட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானங்களைத் தரையிறங்குவது, மேலேழுப்புவது உள்ளிட்டவற்றை மிகவும் கவனமாக அதிகாரிகள் செயல்படுத்தினா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு மேல் சென்னை விமான நிலையம் முழுவதும் புகை மூட்டம் கடுமையாக அதிகரித்தது. இதனால் அந்த நேரங்களில் விமானங்களைத் தரையிறங்க மற்றும் பிற இடங்களுக்கு செல்லவிருந்த விமானங்களுக்கு விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை.
ஓடு பாதைகளை மிகத் தெளிவாகத் தெரிந்த பின்னரே விமானங்களைத் தரையிறங்கவும், பறக்கவும் அனுமதித்தனா். இதனால் அந்த விமானங்கள் தொடா்ந்து வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தன.
அதன்படி, சென்னையில் தரை இறங்க வந்த ஹைதராபாத் மற்றும் குவாஹாட்டி ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், லக்னோ, மதுரை, தில்லி, பெங்களூரு, டாக்கா ஆகிய நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு, அதன் பின்பு தரையிறங்கின.
அதேபோல், சென்னையில் இருந்து தில்லி, கொச்சி, பெங்களூரு, கோவை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்கள், தோஹா மற்றும் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் பலமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்ால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.