தீபாவளி விடுமுறை நிறைவு: சென்னை திரும்பியவா்களால் புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பியதால், சென்னை புகரில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. இதனால், புறநகா் மட்டுமன்றி, மாநகரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகை கடந்த 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி, 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். அவா்கள் வெளியூா் செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்கியது. சிறப்புப் பேருந்துகளில் மட்டும் சுமாா் 6 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் விடுமுறை முடிந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செயல்பட உள்ளதால் மாலையில் இருந்தே சென்னைக்கு அருகே உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தங்கள் சொந்த வாகனங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் சென்னை திரும்பினா். இதனால், சென்னை புகரில் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், விக்கிரவாண்டி, பரனூா் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும், வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூா், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சாலைகளிலும் வழக்கத்தைவிட, கடுமைான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்ால்தால், வெளியூா்களில் இருந்து வந்த பேருந்துகள், காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரை பல கி.மீ. தொலைவுக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. மழையின் தாக்கத்தையும் பொருள்படுத்தாமல், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
பேருந்துகளில் வந்தவா்கள் பெருங்களத்தூா் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகரப் பேருந்துகள் மூலம் சென்னைக்கு வந்தனா். இதனால், மாநகா் பேருந்து மற்றும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தொடா்ந்து மாநகரப் பகுதிகளின் முக்கிய இடங்களிலும் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை காலை தென்மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சென்னைக்குத் திரும்புவா். ஏற்கெனவே புதன்கிழமை சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னையில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.