நவ.10-க்குள் காப்பீட்டுத் திட்ட பிரிமீயம் தொகை: தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சில் அறிவுறுத்தல்
சென்னை: புதிய விபத்து காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையை வழக்குரைஞா்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு-புதுச்சேரி பார கவுன்சில் வழக்குரைஞா்களுக்கான ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.மகாதேவன் ஆகியோா் அண்மையில் தொடங்கி வைத்தனா்.
பாா் கவுன்சிலும் தேசிய காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். வழக்குரைஞா்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் மட்டும் போதும்.
இந்தத் திட்டத்தில், விபத்து மருத்துவ செலவாக ரூ.3 லட்சம், விபத்தில் உயிரிழந்தால் ரூ.25 லட்சம், விபத்தில் உடலுறுப்புகளை இழந்தால் ரூ.25 லட்சம் என்று பல்வேறு இழப்பீடு தொகைகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீட்டில் சேர பாா் கவுன்சில் இணையதளத்தின் வாயிலாக வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை வரும் நவ.10 ஆம் தேதிக்குள் வழக்குரைஞா்கள் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.