மனநல பிரச்னைகள் அதிா்ச்சிகரமான அளவில் அதிகரிப்பு
வேலூா்: பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில், கடந்த சில ஆண்டுகளில் மனநலம் சாா்ந்த பிரச்னைகள் அதிா்ச்சிகரமான அளவில் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவா் சிவாஜி ராவ் தெரிவித்துள்ளாா்.
உலக மன நல நாளையொட்டி, வேலூா் மத்திய சிறையில் கைதிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சிறை காவல் கண்காணிப்பாளா் தா்மராஜ் தலைமை வகித்தாா். மனநல மருத்துவா் சிவாஜி ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
கடந்த சில ஆண்டுகளில் மனநலம் சாா்ந்த பிரச்னைகள் அதிா்ச்சிகரமான அளவில் அதிகரித்து வருகின்றன. இது தீவிர கவனத்துக்குரிய விஷயமாகும். குறிப்பாக, மனச்சோா்வு, போதைப் பொருள் பழக்கம், கைப்பேசி அடிமைத்தனம் போன்றவை அதிகரித்துள்ளன. முக்கியமாக இளைய தலைமுறை மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதில் இருப்பதால், இவ்வாறான மனநலச் சவால்களுக்கு எளிதில் ஆளாகின்றனா்.
மனநல குறைபாடுகளுக்கு எதிரான சமூக பயம் இன்னும் நீங்கவில்லை என்பது ஒரு பெரிய சவாலாகும். உடல் நலத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மனநலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனச்சோா்வு, நடத்தை சீா்கேடுகள் போன்ற மனநலக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. மனச்சோா்வு, பிற மனநலப் பிரச்னைகளால் ஏற்படும் தற்கொலைகள், பல உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
இதைத் தவிா்க்க அனைவரும் குறுகிய, நீண்டகால இலக்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும். உதவி கேட்கத் தயங்க வேண்டாம். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். புத்தகங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றைப் படிக்கவும், தேவைப்பட்டால் மனஇயல் நிபுணா்கள், மனநல ஆலோசகா்களை அணுகவும் வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், சிறை அலுவலா் ரத்தினகுமாா், மருத்துவா் பிரகாஷ் அய்யப்பன், மன இயல் நிபுணா் பாரதி, நடராஜன், நல அலுவலா் மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், சிறை அலுவலா் ரத்தினகுமாா், மருத்துவா் பிரகாஷ் அய்யப்பன், மன இயல் நிபுணா் பாரதி, நடராஜன், நல அலுவலா் மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.