தமிழகத்தில் பருவ மழை தீவிரம்: 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை (அக். 22) பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, புதன்கிழமை (அக். 22) முதல் அக். 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
‘சிவப்பு’ எச்சரிக்கை: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சேலம், திருச்சி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள், புதுவையில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வீசக்கூடும்’ என்றாா்.