முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் கேரள அரசும், அந்த மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. அணையின் பாதுகாப்பு குறித்து தொடா்ந்து வழக்குகளைத் தொடா்வதோடு, பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.