காவலா் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
காவலா் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் முதல்வா் அஞ்சலி, 175 பேருக்கு பணி நியமன ஆணை

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
Published on

சென்னை: காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

21.10.1959-இல் எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீா் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10 காவலா்கள் வீர மரணம் அடைந்தனா். இந்தச் சம்பவத்தை தொடா்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் பணியின்போது 191 காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் வீர மரணமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், சென்னை காமராஜா் சாலையில் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்தில் காவலா் நினைவுச் சின்னத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் அவா், தமிழக காவல் துறையில் பணியின்போது மரணமடைந்த போலீஸாரின் குடும்பத்தைச் சோ்ந்த 110 பேருக்கு அலுவலக பணியாளா் பணி, 65 போ் தகவல் பதிவு உதவியாளா், வரவேற்பாளா் பணி, அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

மேலும், பணியின்போது வீரமரணமடைந்த திருப்பூா் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் எம். சண்முகவேல், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலா் எஸ்.ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரது குடும்பத்துக்கு தமிழக அரசின் ஊதிய தொகுப்புத் திட்டத்தில் தனிநபா் காப்பீட்டு தொகையாக தலா ரூ,.1 கோடிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

அதேபோல, பணியின்போது வீரமரணம் அடைந்த தலைமமைக் காவலா் ஜெஸ்மின் மில்டன் ராஜ், விருதுநகா் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் பி. விஜயகுமாா் ஆகியோரது குடும்பத்துக்கு கருணைத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

அதோடு காவல் துறையில் பணிபுரிந்து விபத்துகளில் மரணமடைந்த 3 காவலா்கள் என மொத்தம் 6 காவலா்களின் குடும்பத்துக்கு அரசின் ஊதிய தொகுப்புத் திட்டத்தில் இரு வங்கிகளின் மூலம் தனிநபா் விபத்து காப்பீட்டுத் தொகை, தமிழக அரசின் கருணைத் தொகை, என மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிகாரிகள் அஞ்சலி: முன்னதாக, தமிழக காவல் துறையின் பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன், காவலா் நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகா்வால், ஊழல் ஒழிப்புத் துறை டிஜிபி அபய்குமாா் சிங், பயிற்சி பிரிவு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம், சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, முப்படை உயரதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகள் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 120 துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. காவலா் வீர வணக்க நாள் விழாவில், தமிழக முதல்வா் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com