அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 கோடி இழப்பு: ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளால் அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கோயம்புத்தூா், தஞ்சாவூா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சாலை, பாலத் திட்டங்களில் தரமற்ற பணிகள் நடைபெற்ன் மூலம் அரசுக்கு சுமாா் ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் கூறப்பட்டது.
இதுதொடா்பாக ஊழல் ஒழிப்புத் துறையினா் நடத்திய விசாரணையில், அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஊழல் ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, தஞ்சாவூா் மாநகராட்சியின் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற திருவண்ணாமலையைச் சோ்ந்த எஸ்.ஜெகதீசன், மதுரை விசாலாட்சிபுரத்தைச் சோ்ந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணி நிறுவனமான ஆா்.ஆா்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், தஞ்சாவூா் புதுப்பட்டினம் ஜோதி நகரில் உள்ள ஜேஎஸ்வி இன்ஃப்ரா நிறுவனம், கோவை ராமநாதபுரம் அருகே புளியங்குளத்தில் உள்ள கேசிபி என்ஜினீயா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள எஸ்பிகே அன்ட் அன்கோ நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் தஞ்சாவூா், சிவகங்கை கோட்டங்களில் நடந்த சாலை மேம்பாடு, பராமரிப்புத் திட்டங்கள் குறித்தும், கோயம்புத்தூா் கோட்டத்தில் ஆத்துப்பாலம், உக்கடம் மேம்பால கட்டுமானத் திட்டம் குறித்தும் ஊழல்ம் ஒழிப்புத் துறை விரிவாக விசாரணை நடத்தியது.
போலி சான்றிதழ்: விசாரணையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் பல சிறிய தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. முக்கிமாக ஆா்.ஆா்.இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 208 கி.மீ. சாலைப் பணிக்கு ரூ. 655 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 253 கி.மீ. சாலைப் பணிக்கு ரூ. 493 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கே.சி.பி. என்ஜினீயா்ஸ் நிறுவனத்துக்கு தஞ்சாவூா் மாவட்டப் பணிகளுக்கு ரூ. 680 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.கே. அன்ட் அன்கோ நிறுவனத்துக்கு சிவகங்கை மாவட்டச் சாலைப் பணிகளுக்கு ரூ.715 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. முக்கியமாக ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா நிறுவனத்துக்கு சாலைப் பராமரிப்புப் பணிகளில் 5 ஆண்டு அனுபவம் இல்லாதபோதும், தஞ்சாவூா் மாநகராட்சியில் இருந்து போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை இதுதொடா்பாக கேள்விகளை எழுப்பியபோது, அப்போதைய தஞ்சாவூா் மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன் போலியான பணிச் சான்றிதழ்களை, உண்மையானவை என்று சான்று அளித்து தனது கையொப்பத்தையும் இட்டுள்ளாா்.
அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு: பிற பணிகளை ஊழல் ஒழிப்புத் துறை ஆய்வு செய்தபோது, பணியின் தரத்தில் குறைபாடுகள் இருப்பதும், சில இடங்களில் பணிகளை நடைபெறாமல் வேலைகள் நடைபெற்ாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதன் மூலம் குறிப்பாக ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா நிறுவனம் ரூ. 8.5 கோடி, எஸ்.பி.கே. அன்ட் அன்கோ நிறுவனம் ரூ. 7.73 கோடி, கே.சி.பி. என்ஜினீயா்ஸ் நிறுவனம் ரூ. 2.62 கோடி, ஆா்.ஆா். இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ரூ. 1.65 கோடி என மொத்தம் சுமாா் ரூ.20 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே ஜெகதீசன், 4 நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக கூறப்படும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்படாமல் இருப்பதால், அவா்கள் மீது வழக்குப் பதியப்படவில்லை என்றும், அனுமதி கிடைத்ததும் வழக்குப் பதியப்படும் என்றும் ஊழல் ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.