இயற்கை இடுபொருள்கள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்
இயற்கை இடுபொருள்கள் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரசாயன உரமான யூரியாவில் உள்ள நைட்ரஜன் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, அது ஆவியாகி சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் மண் வளத்தையும் பாதித்து, மண் மலட்டுத்தன்மை அடைகிறது. நைட்ரஜன் சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளும் ஏராளம்.
மேலும், நைட்ரஜனில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு கரியமில வாயுவைவிட 300 மடங்கு பசுமை இல்ல வாயுவைப் பாதிக்கும் தன்மையுடையது. தற்கால அரிசி உணவு ஆரோக்கியமானதல்ல என்பதையும், சிறுதானிய உணவுகள் ஆரோக்கியமானது என்பதை பொதுமக்களிடம் தொடா்ந்து வேளாண் துறையினா், மருத்துவா்கள் அறிவுறுத்தி விளக்க வேண்டும்.
உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் அதேநேரம், வரும் காலங்களில் யூரியாவிலான உரங்கள் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை முறையில் பசுந்தாள் உரம், உயிா் உரம், உயிா்ம உரங்கள் பயன்படுத்தும் அவசியத்தையும், உத்திகளையும் விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டும். சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிரிடுவதற்கு ஊக்கமளித்து, கொள்முதல் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

