சைவம், வைணம் குறித்த சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சா் பொன்முடி பதிலளிக்க உத்தரவு
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சா் பொன்முடி பதிலளிக்க ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பொன்முடி சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சா்ச்சையானது. இந்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.
சா்ச்சைப் பேச்சு தொடா்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா்.
அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வைத் தூண்டுதல், மத உணா்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், இந்த மனுவுக்கு பொன்முடி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

