தடயமே இல்லாமல் மறைந்து போன தாழ்வுப் பகுதி! இனி மழை இருக்காதா?

தடயமே இல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மறைந்து போனநிலையில் இனி மழை இருக்காதா என்பது குறித்த பதிவு
செயற்கைக் கோள் புகைப்படம்
செயற்கைக் கோள் புகைப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்துக்கு பரவலாக கனமழையைக் கொடுத்து வந்த நிலையில் இன்று தடயமே இல்லாமல் மறைந்து போயிருக்கிறது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தீபாவளிக்கு முந்தைய நாளில் இருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு வலுப்பெறாமல், குறைந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவிழந்து இன்று மறைந்தே போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

வெகு நாள்களுக்குப் பிறகு சூரியன் தலை காட்டியிருப்பதால் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பள்ளி மாணவர்கள்தான் வருண பகவான் கைகொடுப்பார் என்று எண்ணியிருந்த நிலையில், தாழ்வுப் பகுதி வலுவடையாமல் மழை குறைந்ததால், இன்று வருத்தத்தோடு பள்ளிகளுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த வாரம் கைகொடுப்பார் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில், மழை நிலவரங்களை தொடர்ந்து கணித்து வழங்கி வரும் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான், இன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 2 நாள்களாக மழை கொடுத்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, எந்த தடயமும் இல்லாமல் மறைந்துபோனது.

இப்போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, அந்தமான் கடல் அருகே உருவாகி வருகிறது.

இதன் காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேற்கு நோக்கி காற்று வீசும் என்பதால், கன்னியாகுமரிக்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கும். மேற்கு நீலகிரியின் பந்தலூர், அவலாஞ்சி போன்ற பகுதிகள் தென்மேற்கு பருவமழையின் போது மழை பெற்ற அதே பகுதிகளில் தற்போதும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், ராணிப்பேட்டையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது, அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதால், காற்று தற்காலிகமாக மேற்கு நோக்கி வீசுகிறது. எனவே கடந்த சில நாள்களாக காலையிலேயே மழை பெய்யத் தொடங்கிவிடுவது போலல்லாமல், இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேற்கிலிருந்து மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற மாவட்டங்களில் - ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் - காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளம் அல்லது கர்நாடகம் மற்றும் கோவா பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com