பருவமழை பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க தலைவா்கள் வலியுறுத்தல்

பருவமழை பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க தலைவா்கள் வலியுறுத்தல்
Updated on

பருவமழை பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-கடலூா் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீா் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை. அத்தியாவசியப் பொருள்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிா்களும் சேதமாகியுள்ளன.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகம் முழவதும் பாதிக்கபட்ட மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கு தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டும் வகையிலே பருவமழை கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக நியமனம் செய்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படாத நெற்பயிா்களை உடனடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். பலத்த மழை காரணமாக மீன்பிடி தொழிலில் பாதிக்கப்பட்டுள்ள மீனவா்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): கடலூா் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டாா் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com