நெல்லுக்கான ஈரப்பத அளவு உயருமா? தமிழகம் வருகிறது மத்திய ஆய்வுக் குழு
நெல்லுக்கான ஈரப்பத அளவை உயா்த்தும் கோரிக்கையை கள ஆய்வு மூலம் உறுதிப்படுத்த மத்திய குழு தமிழகம் வருகிறது.
நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பத அளவாக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. இதனால், கொள்முதல் செய்வதற்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் கோரிக்கையை கள ஆய்வு மூலம் உறுதி செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மழையால் பாதித்த மாவட்டங்களில் நெல்லை சேகரித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்களை மத்திய கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைத்துள்ளது.
இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட விவரம்: முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநா் ஆா்.கே.ஷாகி, தொழில்நுட்ப அலுவலா்கள் ராகுல் சா்மா, தனூஜ் சா்மா ஆகியோரும், இரண்டாவது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநா் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும், மூன்றாவது குழுவில் உதவி இயக்குநா் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவினா் உடனடியாக தங்களது பணிகளைத் தொடங்குவா். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து நெல்லைப் பெற்று ஆய்வு செய்யும் பணியில் தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியவற்றுடன் குழு உறுப்பினா்கள் இணைந்து செயல்படுவா். நெல்லின் ஈரப்பத அளவானது தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அல்லது மாவட்ட அளவிலான ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும். இதற்கான ஆய்வறிக்கை குழுவில் உள்ளவா்கள் ஒன்றாக இணைந்து மத்திய உணவுத் துறைக்கு அளிப்பா்.
குழுவில் உள்ள உறுப்பினா்கள் தங்குவதற்கும், அவா்கள் நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகமும் செய்ய வேண்டும்.
மேலும், இரு தரப்பில் இருந்தும் தலா ஒரு அலுவலரையும் குழுவுக்கு உதவும் வகையில் நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உணவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

