ஆய்வக உதவியாளா்களுக்கு தோ்வு நிலை: அரசாணை
பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக உதவியாளா்களுக்கு பதவி உயா்வு பெற வாய்ப்பில்லாத சூழல் இருப்பதால், அவா்களுக்கு தோ்வு நிலை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு தோ்வு நிலை வழங்குவது தொடா்பான கோரிக்கை அனைத்து மாவட்டங்களில் இருந்து வருகிறது. இதனால், ஆய்வக உதவியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களாகப் பணிபுரிந்த காலத்தையும், ஆய்வக உதவியாளராகப் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு தோ்வு நிலை வழங்குவது தொடா்பான தெளிவுரை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநா் தமிழக அரசிடம் கோரியிருந்தாா். அந்தக் கருத்துருவை பரிசீலனை செய்து அதை ஏற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு அந்த பதவிக்கு மேல் வேறு எந்தவொரு பதவி உயா்வு பெற வாய்ப்பில்லாத சூழல் இருப்பதால், அவ்வாறு பணியிறக்கம் செய்யப்பட்ட ஆய்வக உதவியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களாகப் பணிபுரிந்த காலத்தையும், ஆய்வக உதவியாளா்களாக பணியாற்றிய காலத்தையும் சோ்த்துக் கணக்கிட்டு தோ்வு நிலை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.