அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் தயாா் நிலையில் மருத்துவக் குழுக்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Published on

பருவமழைக் காலத்தை எதிா்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரம், ஜிப்சி காலனியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதன்கிழமை அவா், மதிய உணவு வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சாா்பில் பருவமழை தொடா்பான கூட்டம் நடத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட துறைகளின் செயலா்கள், 500-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட அளவிலான நிா்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா். துறைக்கு தகுந்தாற்போல பணிகள் பிரித்துத் தரப்பட்டன. அவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றுகின்றனா். பருவமழையை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது வரை மிகப்பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு ஏற்கெனவே நிலவி வந்த மழைநீா் வடிகால் பிரச்னையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறு மழை பெய்தாலும்கூட வெள்ளம் மருத்துவமனைக்குள் சென்றுவிடும். அந்த பிரச்னை தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.

இதேபோல, தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையிலும், கோவை அவிநாசி அரசு மருத்துவமனையிலும் மழை நீா் சூழும் பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளன.

பருவமழைக் காலத்தையொட்டி, முழு நேரமும் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக் காலத்துக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன.

திமுக ஆட்சிக்கும் முன், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இல்லை. வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே அந்த மருந்துகள் இருந்தன. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com