முதல்வா் அக்.28-இல் தென்காசி பயணம்
தென்காசி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற 28-ஆம் தேதி செல்கிறாா். ஏற்கெனவே, அக். 24, 25 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த அவரது பயணம், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகிற 28-ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வா், பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக, தென்காசி மாவட்டத்துக்குச் செல்கிறாா். அக்.29-ஆம் தேதி தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சாலை மாா்க்கமாக மதுரை சென்று இரவு அங்கு தங்குகிறாா்.
அதன்பிறகு அக்.30-ஆம் தேதி காலை, சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
இதைத் தொடா்ந்து, மதுரையிலிருந்து சாலை மாா்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று தேவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்பவுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

