இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
PTI

இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Published on

தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவுவதால், தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (அக்.24) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடா்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 130 மி.மீ. மழை பதிவானது. அரூா் (தருமபுரி) 110 மி.மீ., மோகனூா் (நாமக்கல்), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), வெள்ளக்கோயில் (திருப்பூா்) - 90 மி.மீ., திருத்தணி (திருவள்ளூா்), அவலூா்பேட்டை (விழுப்புரம்), கிளன்மாா்கன் (நீலகிரி)- 80 மி.மீ., ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சூரப்பட்டு, கெடாா் (விழுப்புரம்), துவாக்குடி (திருச்சி), நடுவட்டம் (நீலகிரி), மேட்டூா் (சேலம்), திருவாலங்காடு (திருவள்ளூா்), ஊத்து (திருநெல்வேலி), துவாக்குடி (திருச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி) - 70 மி.மீ மழை பதிவானது.

தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதன்கிழமை (அக்.22) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை (அக்.23) காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, வட தமிழக உட்பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது வியாழக்கிழமை காலை தெற்கு உள் கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவுகிறது. பின்னா், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை (அக்.23) தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்.24) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையக்கூடும்.

இடி, மின்னலுடன்... இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (அக்.24) முதல் அக்.29-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.24) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், அந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com