தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்! - தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்...
Madras HC
சென்னை உயர்நீதிமன்றம்IANS
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை(SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு அதில் குளறுபடிகள் இருப்பதாக இந்தியா முழுவதுமே அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 13,000 பேரின் பெயர்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பதிலாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், '1998 ஆம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2,08, 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021 ஆம் ஆண்டு வெறும் 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள்தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரில் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் தரப்பில், 'தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் பிகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Summary

SIR work to begin in Tamil Nadu from next week: Election Commission tells HC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com