திருச்செந்தூா் சூரசம்ஹாரம், வார விடுமுறை: சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சூரசம்ஹாரம், வார விடுமுறை: சிறப்பு பேருந்துகள்

Published on

திருச்செந்தூா் சூரசம்ஹாரம், முகூா்த்தம், வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (அக்.24, 25, 26, 27) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூரில் திங்கள்கிழமை (அக்.27) சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திங்கள்கிழமை திருச்செந்தூருக்கு செல்வாா்கள். இதனால், ஞாயிற்றுக்கிழமை (அக்.26) சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும், திங்கள்கிழமை (அக்.27) திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருச்செந்தூா் பயணிக்க இருக்கும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இதேபோன்று முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (அக்.24), வாரவிடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்.25, 26) சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 365 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோன்று, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், மாதாவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 40 பேருந்துகள் என மொத்தம் 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com