

நெல்லை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில்தான், மனித உரிமை மீறல் புகார்கள் அதிகம் பதிவாகிறது என்று நெல்லையில் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேசுகையில் குறிப்பிட்டார்.
நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை இன்று நடந்தது. இதுதொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பாக நெல்லை அமர்வில் இன்று 14 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதன் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆணையம் விசாரிக்கும் வழக்குகள் குறைந்துவிட்டனவா என்ற கேள்விக்கு, "புகார்கள் குறையவில்லை. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன. குறிப்பாக, மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் இருந்து அதிக புகார்கள் வருகின்றன.
உதாரணமாக, திருப்பூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், தன் தந்தையை சித்தப்பா கொன்றுவிட்டதாகவும், தனக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்தார். ஆனால் போலீஸ் அந்தப் புகாரைப் பதிவு செய்யவில்லை. அவர் ஆணையத்தில் முறையிட்டு, 'இன்றே விசாரியுங்கள், நான் அடுத்த முறை உயிருடன் வருவேனா எனத் தெரியவில்லை' என்று கோரினார்.
துரதிருஷ்டவசமாக, அவர் சொன்ன மூன்றே நாள்களில், அவர் குற்றம்சாட்டிய நபர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். தற்போது கணவரையும் மகனையும் இழந்த அந்தத் தாயார் எங்களிடம் புகார் அளித்துள்ளார்.
மேற்கு மாவட்டங்களில் போலீசாரின் இதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆணையம் உறுதுணையாக இருக்கும்.
இன்றைய அமர்வில், நெல்லை திருப்பணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை என கொடுத்த புகாரின் பேரில், அரசு அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதில் அரசுத் துறைகளான வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு இடையே இருந்த இடர்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. தற்போது அந்த இடர்பாடுகள் பெரும்பாலும் களையப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, வனத்துறையினரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். சுமார் 45 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினைக்கு தற்போது ஒரு விடிவு காலம் வந்திருக்கிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் நவம்பர் 21ம் தேதி இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு எஸ்ஐ ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "சிறைகள் குறித்து வரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் 99 சதவீதம் உண்மைகள் இருப்பதில்லை. ஒரு வழக்கில் கைதாகும் போலீஸ் துறையினரை, அவர்களின் பாதுகாப்பு கருதி தனியாகப் பிரித்து வைப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான். சிறைக்குள் வந்துவிட்டால், ஒருவரின் முழுப் பாதுகாப்பும் சிறைத்துறையைச் சார்ந்தது. தற்போது சிறைகளில் மத்திய சமையல் கூடம் வந்துவிட்டது. தரமான உணவு வழங்கப்படுவதால், வெளியில் இருந்து உணவு கொண்டு வரத் தேவையில்லாத சூழலே நிலவுகிறது.
தனியார் கல்வி மைய மாணவர் விவகாரத்தில் எங்களுக்குக் கிடைத்த அறிக்கைகள் முழுமையற்றதாக இருந்தன. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களோ, மனிதர்களோ யாராலும் துன்புறுத்தப்படக் கூடாது என்பதில் ஆணையம் தெளிவாக உள்ளது. பதில் வந்தவுடன் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசார் சிவில் வழக்குகளில் தலையிடுவதை ஆணையம் ஏற்காது. வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக போலீசார் தலையிட்டால், ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அதேசமயம், இன்று ஒரு வழக்கில், வீடு காலி செய்யப்படுவதால் தெருவில் நிற்கப் போகிறேன் என்று ஒரு ஏழை மனுதாரர் அழுதார். அதுபோன்ற சூழலில், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யும்படி போலீசாரிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம்.
கடந்த மாதம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் குறித்துக் கேட்டபோது, இரு தரப்பினரும் அது ஒரு புரிதல் இல்லாததால் நடந்த வாக்குவாதம் என்றும், தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டதாகவும், விசாரணை தேவையில்லை என்றும் கூறிவிட்டதால், அந்த விவகாரத்தில் புகார் எதுவும் பெறப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க.. வங்கக் கடலில் அக்.27-ல் உருவாகிறது புயல்! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.