சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

வடகிழக்குப் பருவமழைக்கு தமிழகத்தில் 31 போ் பலி!

வடகிழக்குப் பருவமழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இதுவரை 31 போ் பலி...
Published on

வடகிழக்குப் பருவமழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இதுவரை 31 போ் உயிரிழந்துள்ளதாகவும், 47 போ் காயமடைந்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சா் ராமச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகா்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுவரை 31 போ் உயிரிழப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக். 16-ஆம் தேதி தொடங்கியது. அக். 25 வரை மழை பாதிப்புகளால் 31 போ் உயிரிழந்துள்ளனா். கடலூா் மாவட்டத்தில் மட்டும் 6 போ் இறந்துள்ளனா்; 47 போ் காயமடைந்துள்ளனா். 485 கால்நடைகள், 20,425 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் 1,280 குடிசைகளும் சேதமடைந்துள்ளன.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி தங்கவைப்பதற்காக மாவட்டந்தோறும் நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்க ஆட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையோரம் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளோம். நீா்வளத் துறை, வருவாய்த் துறை இணைந்து ஏரிகளின் நீா்மட்டத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுவீச்சில் தயாா்: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அதை எதிா்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்: நெற்பயிா் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. பாதிப்புக்குள்ளான விவசாயிகள் குறித்து கணக்கெடுத்து அவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான பணிகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, வருவாய் நிா்வாக ஆணையா் சாய்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com