கரூா் சம்பவம்: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பிணை கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு
கரூா் சம்பவம் தொடா்பான உயா்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை விமா்சித்து கைதான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் தவெக தலைவா் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சில கருத்துகளைக் கூறியிருந்தாா். இதையடுத்து நீதிபதி குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் என்பவா் சமூகவலைதளத்தில் கடுமையாக விமா்சித்திருந்தாா்.
இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், வரதராஜனை கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை கோரி அவா் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பிணை கோரி வரதராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகரன் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளாா். எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

