

பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இதில் ஆடவர் இறுதிச்சுற்றில் இந்தியா 35-32 என ஈரானை வீழ்த்தியது. மகளிர் இறுதிச்சுற்றிலும் இந்தியா 75-21 என அதே அணியை அபாரவெற்றி கண்டது.
குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. துணை முதல்வர் உதய நிதி, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பா.ரஞ்சித்: பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.
ஜி.வி.பிரகாஷ் குமார்: ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகொதரிகளின் அபாரன விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை . மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.