தமிழகத்தில் வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிவாரண முகாம்களை தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், பேரிடர் மேலாண் துறை ஆணையர் சாய்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறகு மழை நிலவரங்கள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை, வருவாய்த் துறை இணைந்து ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதியிலிருந்து துவங்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
பேரிடர் வருவாய் துறை கணக்கின்படி 1.10.2025 முதல் 24.10. 2025 வரை மொத்தம் மழையின் அளவு 21.8 சதவீதம் ஆகும். இயல்பாக மழை பெய்யக் கூடிய அளவை விட சற்று கூடுதலாக உள்ளது.
புயல் தொடக்கத்தில் சென்னையை நோக்கி வருவதாக தகவல் வந்திருந்தது தற்போது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய ஒரு பகுதியாக சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது.
முதல்வர் ஸ்டாலினும் அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்.
அக். 25ஆம் தேதி வரை பெய்த மழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தொடர் கனமழை காரணமாக 31 பேர் உயிரிழந்த நிலையில் 23 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - மீதம் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையை தமிழக முதல்வர் ஸ்டாலின் சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் கையாள்வார் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.