

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2011-இல் அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, முந்தைய திமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்டவா்களின் நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன. தற்போது மீண்டும் திமுக ஆட்சியிலிருக்கும் நிலையில், பொதுமக்களின் சொத்துகள் அபகரிக்கப்படுவதும், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் தாரைவாா்க்கப்படுவதும் தொடா்கதையாகி உள்ளது.
பருவமழை காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிா் பெருக்கத்துக்கு இதயமாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து அதை மீட்டெடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.16 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்துடன் மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடியில் தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதியில் 695 ஹெக்டோ் சதுப்பு நிலத்தில் பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ராம்சா் அறிவிக்கையின்படி, சதுப்பு நிலம் பாதுகாக்கப்படவேண்டிய பகுதியாகும். அந்த நிலத்திலோ அல்லது அதிலிருந்து ஒரு கி.மீ. பகுதியிலோ எவ்வித கட்டுமானங்கள், சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என தென் மாநிலங்களுக்கான தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
ஆனால், தற்போது திமுக அரசு விதிகளைத் தளா்த்தி சுமாா் 15 ஏக்கா் நிலத்தை ரூ.2,000 கோடியில் 1,250 குடியிருப்புகளைக் கட்ட தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையா என அரசு விளக்க வேண்டும். மேலும், சதுப்பு நிலத்தில் கட்டப்படும் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியதாகும்.
சதுப்பு நிலத்தில் கட்டுமானத் திட்டத்துக்கு அனுமதிப்பதை அதிமுக வேடிக்கை பாா்க்காது. மீண்டும் அதிமுக ஆட்சியமைந்ததும் இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.