‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: இதுவரை 6.97 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இதுவரை நடைபெற்ற 446 முகாம்களில் 6,97,941 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகா் மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்”திட்ட முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஸ்ரீபெரும்புதூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அவா்கள் சான்றிதழ்களை வழங்கினா். தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 38 மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 446 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 6,97,941 போ் பயனடைந்துள்ளனா்.
26,819 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்: இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முகாம்கள் மூலம் 26,819 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியாா் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில்கூட ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.47 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனா். புதிதாக பதிவு செய்தவுடன் அவா்களுக்கும் காப்பீடு அட்டை உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் 21,191 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 170 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது. பருவமழை கூடுதலாக பெய்யத் தொடங்கியவுடன் எவ்வளவு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.

