ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை அதிகாலை மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில் சென்னை போயஸ்காா்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிடச் சென்றனா்.
ஆனால், வீட்டை சோதனையிடுவதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்காததால், போலீஸாா் வெடிகுண்டு சோதனை செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இருப்பினும் மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
