215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள்: தமிழக அரசு

215 இடங்களில் செயல்பட்டுவரும் மழை வெள்ள நிவாரண மையங்கள்.
tngovt
தமிழக அரசு
Published on
Updated on
2 min read

215 இடங்களில் செயல்பட்டுவரும் மழை வெள்ள நிவாரண மையங்கள் மூலம் பாதிக்கப்படுவோருக்கு உணவு,  மருத்துவம், குடிநீர் வசதிகள் உடனுக்குடன் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை  காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த பருவமழையால்  மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் அச்சமின்றி தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும்  அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.

 இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் அக். 17 முதல் காலை 8.30 மணி முதல் அக். 27 காலை 8 மணி வரை சராசரியாக 221 . 80 மி.மீ. மழை பெய்துள்ளது. அக். 26 காலை 8.30 மணி முதல் இன்று (அக். 27) காலை 8 மணி வரை சராசரியாக 2.51 மி.மீ. மழை பெய்துள்ளது.  இதில், அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலம் எண்ணூர்  பகுதியில்  4 . 50 மி.மீ.  மழை  பெய்துள்ளது.

மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள  மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, 17.10.2025 அன்று முதல் 25.10.2025 வரை 408 நிலையான மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 574 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 24,146 நபர்கள் பயனடைந்துள்ளனர். 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகின்றன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள்  செய்யப்பட்டுள்ளன.

நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அக். 22 முதல் அக். 27 வரை மொத்தம் 4 லட்சத்து 9  ஆயிரத்து 650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 

மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2000 க்கு மேற்பட்ட மோட்டார் பம்புகள்  ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக  457 மர அறுவை இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள  22 சுரங்கப்பாதைகளில்  மழைநீர்  தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்  வாழும் பொதுமக்களுக்கு மழை வெள்ளம் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், 150 இணைப்புகளுடன் கூடிய 1913  எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்குப் புகார்கள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புகார்கள் மூலமும் சமூக ஊடகங்களில் வரும்  புகார் மீதும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியம் 2,149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.  

 சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு 454 குடிநீர் வாகனங்கள் மூலம் அக். 15 முதல் குடிநீர்  வழங்கப்படுகிறது.அக். 26 அன்று மட்டும் 2828 நடைகள் வாயிலாக தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rain and flood relief centers operating in 215 locations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com