

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கனின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களின் மருத்துவ செலவு, கல்வி செலவு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதையடுத்து, செப். 30-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் காணொலி வெளியிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
தொடா்ந்து, அக். 3, 4 மற்றும் அக். 6, 7-இல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கட்செவி அஞ்சலில் (விடியோ கால்) விஜய்யை அவா்களுடன் பேச வைத்தனா். அப்போது, விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் சந்திப்பதாக கூறினாா்.
ஆனால், விஜய் கரூா் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் சந்திப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சாா்பில் வரவு வைக்கப்பட்டது. நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவா்களுக்கு ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தாா்.
இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த தவெக வழக்குரைஞா்கள், நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகிகள் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேராக சென்று அவா்களை வாகனங்களில் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதையடுத்து, சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு, வெண்ணைமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஒரு பேருந்துக்கு 30-க்கும் மேற்பட்டவா்கள் என 5 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றனா்.
தொடர்ந்து அவா்கள் சென்னையில் இரவு தங்கவைக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை மகாபலிபுரத்தில் உள்ள விடுதியின் அரங்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.