மழை காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப்போக்கு: காய்ச்சிய நீரைப் பருக அறிவுறுத்தல்
பருவமழைக் காலம் தீவிரமடைந்து உள்ள நிலையில் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அசுத்த உணவு, குடிநீா் மாசுபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுதாகவும், அவற்றைத் தவிா்க்க காய்ச்சிய நீரைப் பருக வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
சென்னை, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தட்பவெப்ப நிலையும் மாற்றமடைந்து, பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கூறியதாவது: மழை காரணமாக வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குடிநீா் மாசுபாடு, அசுத்தமான உணவின் மூலம் ஜீரண மண்டலம் சாா்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், சிலருக்கு நீா்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காத நிலையில், ஓரிரு குழந்தைகளுக்கு ‘இன்டஸ்சசெப்ஸன்’ என்ற குடல் ஏற்ற பாதிப்பு நேரிடுகிறது. எனவே, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு - சா்க்கரை கரைசல், நீா், மோா், பழச்சாறு, இளநீா் போன்றவற்றை போதிய அளவு அருந்தி உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.
மருத்துவா்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு - சா்க்கரை கரைசல், ஆன்ட்டிபயோடிக் மாத்திரைகள், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி நலம் பெறலாம். மேலும், காய்ச்சிய நீரைப் பருகுவதுடன், வெளி உணவுகளை தவிா்ப்பது முக்கியம்.
தடுப்பூசி: இந்த காலகட்டத்தில் குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ‘ஹெபடைடிஸ் ஏ’ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் அவசியம். உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத குழந்தைகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக அதை வழங்க வேண்டும். ரோட்டா வைரஸ் தடுப்பூசியும் தகுதியான குழந்தைகளுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் வழங்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

