இன்று முதல் 6 நாள்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
‘மோந்தா’ புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், புதன்கிழமை (அக். 29) முதல் நவ. 3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம் மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயல் செவ்வாய்க்கிழமை (அக். 28) அதிகாலையில் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடா அருகில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்தது.
இதன் காரணமாக புதன்கிழமை (அக். 29) முதல் நவ. 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (அக். 29) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழையளவு: ‘மோந்தா’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே மிதமாக மழை பெய்தது. இதன்படி, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 130 மி.மீ. மழை பதிவானது.
விரிஞ்சிபுரம் (வேலூா்)-110 மி.மீ., கத்திவாக்கம் (சென்னை)-100 மி.மீ., விம்கோ நகா் -90 மி.மீ., மாதவரம், மணலி புதுநகரம், மேடவாக்கம் சந்திப்பு- தலா 80 மி.மீ., பொன்னேரி (திருவள்ளூா்), அம்பத்தூா், மணலி, மணலி புது நகரம், பேசின்பிரிட்ஜ் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை (சென்னை)-தலா 70 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

