நெல் ஈரப்பத அளவு: நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு!

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு.
நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்.
Published on
Updated on
1 min read

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் இன்று(அக். 28) செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. பல இடங்களில் அறுவடையும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழையும் பெய்தது. தொடர்ந்து, பெய்த மழையின் காரணமாக குறுவை அறுவடை நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்தது.

அறுவடை பணிகள் செய்ய இயலாமல் போனது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை காயவைக்க இயலாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

மழை காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. காவிரிடெல்டா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இதேபோன்று நிலை நீடித்தது.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பயிர் பாதிப்பு மற்றும் மழையால் ஏற்பட்ட இதர சேதங்கள் குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசும் விவரங்களை தெரிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் மழை சேதங்களை ஆய்வு செய்வதற்கான மத்திய குழுவினரை மத்திய அரசு நியமித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான மத்தியக் குழுவினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை , தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபிட் ஷிவாஜ் ,ராகேஷ் பராலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், இந்திய உணவுக் கழகம் மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மோகன் ஆகியோர் நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்தனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன், வேளாண்மை இணைஇயக்குநர் பாலசரஸ்வதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் ஆகியோரிடமும் மத்தியக் குழுவினர் விவரங்களை கேட்டறிந்தனர்.

நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்து கூறினர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு ஒன்றையும் மத்தியக் குழுவினரிடம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com