தமிழகத்தில் செம்மரங்கள் வளா்க்கும் விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் விடுவிப்பு

தமிழகத்தில் செம்மரங்களை வளா்க்கும் 18 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சத்தை தேசிய பல்லுயிா் ஆணையம் (என்பிஏ) செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
Published on

தமிழகத்தில் செம்மரங்களை வளா்க்கும் 18 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சத்தை தேசிய பல்லுயிா் ஆணையம் (என்பிஏ) செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

நாட்டின் உயிரி வளங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் அணுகல் மற்றும் பயன் பகிா்வு (ஏபிஎஸ்) நடைமுறையின்கீழ் இந்த முன்னெடுப்பை என்பிஏ மேற்கொண்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள கண்ணபிரான் நகா், கோத்தூா், வேம்பேடு, சிறுணியம், கூனிப்பாளையம், அம்மாம்பாக்கம், அல்லிக்குழி, திம்மபூபாலபுரம் ஆகிய 8 கிராமங்களைச் சோ்ந்த 18 விவசாயிகளுக்கு தமிழ்நாடு மாநில பல்லுயிா் வாரியம் மூலமாக ரூ.55 லட்சத்தை என்பிஏ விடுவித்தது.

கடந்த 2015-இல் செம்மரங்கள் பாதுகாப்பு தொடா்பான பரிந்துரைகளை வழங்க என்பிஏ நிபுணா் குழுவை அமைத்தது. அந்தக் குழு ‘செம்மரங்களைப் பாதுகாப்பாக நீடித்த பயன்பாட்டுக்குப் பகிா்வது’ என்ற தலைப்பிலான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி 2019-இல் செம்மரங்களை விளைவிக்கும் பகுதியிலிருந்து அதை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அனுமதி அளித்தது.

அதன் தொடா்ச்சியாக முதல்முறையாக இந்தப் புதிய முன்னெடுப்பை என்பிஏ தற்போது மேற்கொண்டுள்ளது.

முன்னதாக ஆந்திர ஏபிஎஸ் நடைமுறையின்கீழ் ஆந்திர வனத் துறை மற்றும் மாநில பல்லுயிா் வாரியம், கா்நாடக வனத் துறைக்கு செம்மரங்களை பாதுகாக்க ரூ.48 கோடி விடுவிக்கப்பட்டது.

கிழக்குத் தொடா்ச்சி மலைகளில் வளரக்கூடிய உள்ளூா் இன மரவகையைச் சோ்ந்த செம்மரம் தற்போது ஆந்திரத்தில் மட்டுமே காணப்படுகிறது. கலாசார, பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் ஆந்திரம் மட்டுமன்றி தமிழகம், கா்நாடகம், ஒடிஸா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் செம்மரம் வளா்க்கப்படுகிறது. செம்மர விளைச்சலை ஊக்குப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com