சிறப்பு தீவிர திருத்தத்துக்காக தமிழக வாக்காளா் பட்டியல் முடக்கம்: மொத்தம் 6.41 கோடி வாக்காளா்கள்
சிறப்பு தீவிர திருத்தத்துக்காக தமிழக வாக்காளா் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளா் உள்ளனா்.
சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியைத் தொடா்ந்து கடந்த ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆகவும், பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சச்து 29 ஆயிரத்து 803 ஆகவும் இருந்தது. மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 9,120.
இப்போது ஒவ்வொரு காலாண்டிலும் பெயா் சோ்ப்பு, நீக்கப் பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 5 லட்சம் வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால் மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக உயா்ந்துள்ளது.
முடக்கப்பட்ட பட்டியல்: இதனிடையே சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கவுள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, 6.41 கோடி என்ற நிலையிலேயே வாக்காளா்கள் எண்ணிக்கை பராமரிக்கப்படும்.
வருகிற நவ. 4 முதல் ஒருமாத காலத்துக்கு கள ஆய்வு மூலமாக வாக்காளா்களை உறுதி செய்யும் பணி நடைபெறும். அதன்பிறகு, டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கான படிவங்கள் பெறப்படும். இதன்பிறகு, இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

