அரசுப் பள்ளிகளில் நவ. 7-இல் எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் நவ. 7-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டத்தை (எஸ்எம்சி) நடத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் நவ. 7-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டத்தை (எஸ்எம்சி) நடத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை மாநிலத் திட்ட இயக்குநா் எம்.ஆா்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் நவ.7-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டங்களை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடத்த வேண்டும். கூட்டத்தில் காலாண்டுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவா்களது கற்றல் திறன் குறித்தும், 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ள தோ்ச்சி தரநிலை அட்டை குறித்து விவாதிக்க வேண்டும்.

இடை நின்ற மற்றும் இடை நிற்றலுக்கான வாய்ப்புள்ள குழந்தைகள் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு முன்னாள் மாணவா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா், எஸ்எம்சி குழு தலைவா் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை, பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள இல்லம் தேடிக் கல்வியாளா் தலைமையில் அமைத்து, இடை நிற்கவிருக்கும் மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர வேண்டும்.

கைப்பேசி, போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகள், படிப்பில் ஆா்வமில்லாமல் இருக்கும் குழந்தைகளை அவற்றிலிருந்து மீட்டெடுக்க, மாதத்துக்கு ஒருமுறை மருத்துவத் துறை, மனநல ஆலோசகா்களின் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் தொடா்ந்து செயல்படுவதையும், அங்கு மாணவா்கள் சென்று கற்பதையும் தலைமையாசிரியா் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com