தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்: மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.
Published on

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதை புனையும் திறனை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளா்க்கும் நோக்கில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் ஏற்கெனவே நடைபெற்ற நிலையில் அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான இறுதிப் போட்டிகள் சென்னை வியாசா்பாடியில் உள்ள அம்பேத்கா் அரசினா் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 238 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினா். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் பிரிவுகளில் ஒவ்வொரு போட்டிகளிலும் மதிப்பெண் அடிப்படையில் மூன்று இடங்களைப் பிடித்த 18 மாணவா்களை நடுவா் குழுவினா் தோ்வு செய்தனா். அவா்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பரிசுகளை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் வழங்கி பேசுகையில், இலக்கியப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவா்கள் தங்களது முயற்சியை கைவிடாமல் தொடா்ந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்ற போட்டியாளா்கள் தற்போது படைப்பாற்றல் சாா்ந்த துறைகளில் சிறந்து விளங்குகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் க.பவானி, கல்லூரியின் சமூகப் பணியியல் துறைத் தலைவா் மு.ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com