

ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை, 7 பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றுவது என கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆவடியில் உள்ள இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த விவகாரம் தொழில் தகராறு சட்டப்படி பேச்சுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, ஆவடியில் உள்ள அகில இந்திய ராணுவத் தளவாட நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதாரண கொள்கை முடிவுகளை முடக்குவதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஒருவேளை போர் அறிவிக்கப்பட்டு, ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் இருப்பில் இருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் தீர்ந்து, மேலும் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அதிக உற்பத்தித் திறனுடன் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்யவே ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனங்ளாக மாற்றுவது என நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.