

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோருக்கு துணை நின்று அவர்களது பிரச்னைகளைத் தீர்த்து வைப்பேன் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு தமிழகத்துக்கு முதல் முறையாக செவ்வாய்க்கிழமை (அக். 28) வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கொடிசியா அரங்கில் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார்.
திமுக, அதிமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கோவையின் பல்வேறு தொழில் அமைப்புகள், தொழில்முனைவோர், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது எனக்குக் கிடைத்த மரியாதை இல்லை. அதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், கோவை மக்களுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.
இங்கு பேசியவர்கள் விவசாயிகள், தொழில்முனைவோரின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். உங்களுடன் துணை நின்று விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரின் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்.
தொழில் துறையும் விவசாயமும்: 2047-இல் உலகின் உன்னத தேசமாக இந்தியா மாற வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். தனிநபர்கள் உயர்ந்தால்தான் நாடு உயர முடியும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி பிற மாநிலங்களின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும். தொழில்களின் நலன் குறித்துப் பேசும்போது விவசாயத்துக்கு எதிரானது என்று கருதும் நிலை இருந்தது. நாம் அதை மாற்றிக் காட்டியுள்ளோம். தொழில் துறையும் விவசாயமும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்க வேண்டும்.
மூன்று மடங்கான தென்னை நார் ஏற்றுமதி: நான் தென்னை நார் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றபோது அந்தத் துறையில் கயிறு, வடம் ஆகிய இரண்டு பொருள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆலப்புழையில் நடைபெற்ற வாரியத்தின் முதலாவது கூட்டத்தில் பேசும்போது 3 ஆண்டுகளில் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கிக் காட்டுவேன் என்று கூறினேன்.
ஆனால், அது சாத்தியமல்ல என்றனர். ஏனெனில், 1954 முதல் 2016 வரை தென்னை நார் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.652 கோடியாக மட்டுமே இருந்தது. 3 ஆண்டுகளின் முடிவின்போது ஏற்றுமதி ரூ.1,782 கோடியாக உயர்த்தப்பட்டது.
விரைவில் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில்: குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ரயில்வே அமைச்சரைச் சந்தித்தபோது, பெங்களூரு - எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்; அது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் நின்று செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொங்கு மண்டலத்துக்கு வரும் தொழிலாளர்களின் வசதிக்காக கோவை - ராஞ்சி இடையே தினசரி ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
நான் எத்தனை உயரத்தில் இருந்தாலும் உங்களில் ஒருவனாக இருப்பேன். இந்த உயர்வு உங்களால் ஏற்பட்டது என்றார்.
முன்னதாக, சக்தி குழுமத்தின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்றார். கொடிசியா தலைவர் எம்.கார்த்திகேயன், நாகசாயி அறக்கட்டளையின் செயலர் பாலசுப்பிரமணி, செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் பி. லுண்ட் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏக்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, செ.ம.வேலுசாமி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் டி.ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர், கல்வி நிறுவன அதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை: பாராட்டு விழாவுக்குப் பின்னர், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
"பிற மொழி எதிர்ப்பால் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை'
பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை. சம்ஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதால் தமிழ் வளர முடியாது. தமிழ் தீண்டத்தகாத மொழி என்று கூறுவதால் சம்ஸ்கிருதம் வளர முடியாது. குறிப்பிட்ட மொழியில்தான் வழிபட வேண்டும் என்று எந்தக் கடவுளும் கூறவில்லை. அவரவர் வசதிக்கேற்ற மொழியில் வழிபடலாம் என்றார்.
பேரூர் நிகழ்ச்சியை அடுத்து சாலை மார்க்கமாக சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூருக்குச் சென்றார். ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூரில் புதன்கிழமை (அக். 29) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.