

கார்த்திகை மாதம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு நவம்பர் 16ஆம் தேதி முதர்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி வரை இந்த சேவை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் பம்பைக்கு சுமார் 100 சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகவே இந்த பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும். குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதிகொண்ட பேருந்துகள் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படவிருக்கின்றன.
இந்த சிறப்புப் பேருந்து சேவை டிசம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும், சபரிமலை கோயில் நடை அந்த நாள்களில் மூடப்படுவதால் பேருந்து வசதியும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர், www.tnstc.in அல்லது அரசுப் போக்குவரத்துக் கழக செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், 9445014452 அல்லது 9445014424 அல்லது 9445014463 என்ற எண்களில் மேலதிகத் தகவல்களைக் கேட்டறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.