பேரவைத் தேர்தல் தோல்விக்கு இப்போதே காரணத்தை அறிவித்து விட்டது திமுக: சிறப்பு திருத்தம் குறித்து இபிஎஸ்

பேரவைத் தேர்தல் தோல்விக்கு இப்போதே காரணத்தை அறிவித்துவிட்டது திமுக என்று சிறப்பு திருத்தம் குறித்து இபிஎஸ் பேச்சு
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

மதுரை: தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தல் தோல்விக்கு இப்போதே திமுக காரணத்தை அறிவித்துவிட்டது என்று வாக்காளர் சிறப்பு திருத்தமுறை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினார். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், சார் என்றால் திமுகவிற்கு அலர்ஜி. உங்களுக்கு நல்லா தெரியும் எந்த சார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

எஸ்ஐஆர் என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் சென்று ஆர்.கே.நகரில் மட்டும் 36 ஆயிரம் வாக்குகள் நீக்கி இருக்கிறோம். பல முறை அதிகாரிகளிடம் இறந்தவர்களின் பட்டியல், குடியிருப்பில் இல்லாதவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் முறையாக விசாரிக்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று தான் 36 ஆயிரம் பேரை நீக்கி இருக்கிறோம்.

அதேபோல் கரூரில் நீதிமன்றத்தில் மூலம் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கி இருக்கிறோம். 2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், குடிசைமாற்று வாரியத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படடு விட்டது. ஆனால் அங்கு குடியிருப்பதாக பட்டியல் தயராகி இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெயர் நீக்கப்படவில்லை. இது போன்ற நிலைமை எல்லாம் மாற வேண்டும்.

தகுதியான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. 234 தொகுதிகளிலும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. எடப்பாடி தொகுதியில் கூட இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் கணக்கெடுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி எல்லா தொகுதியிலும், 10 ஆயிரம், 15, 20, 30 ஆயிரம் என இறந்தவர்கள் பெயர்கள், வீடு மாற்றிச்சென்றவர்கள் பட்டியல் இருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்து, எஸ்ஐஆர் திட்டத்தின் மூலம் உண்மையான பட்டியல் வந்தால், உண்மையான தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

திமுக ஆளும் கட்சி, நாங்கள் தான் பயப்பட வேண்டும், அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆளும் கட்சி பயப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்து விடும் என்று அச்சப்படுகிறார்கள். தோல்விக்கு ஒரு காரணத்தை இப்போதே திமுகவினர் அறிவித்து விட்டார்கள்.

யார் உண்மையான வாக்காளர்கள் என்று வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டியது மாநில அரசு அதிகாரிகள் தான். இப்போது அவர்கள் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பணி முடிந்து மீண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அப்பயிருக்கும் இது நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.’’ என்றார்.

இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு இபிஎஸ், ‘’இவர்களுடைய சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது. இபிஎஸ்-ஐ வீழ்த்துவோம் என்று 4 ஆண்டுகளாக தினமும் டிடிவி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.

இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்கள், அது ஏற்கனவே போட்ட திட்டம் தான். இன்றா நேற்றா திட்டம் போடுகிறார்கள்..? அதிமுகவில் இருக்கும் போது குழி பறித்த காரணத்தால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்த காரணத்தால் தான், 2021-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொன்னார். இவரா அதிமுககாரர்..? இவரா அதிமுகவை ஒருங்கிணைப்பவர்..? உண்மையான அதிமுககாரரின் வாயில் இருந்து அப்படிப்பட்ட வார்த்தை வராது. இவர்கள் எல்லாம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள்.’’ என்றார்.

செங்கோட்டையன் மீது நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, ‘’அதிமுகவை பொறுத்தவரை தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால், யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

டிடிவியின் பேச்சுக்கு, ‘’அதிமுகவை பொறுத்தவை எத்தனை எட்டப்பர்கள், எத்தனை துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் தலைமையில் இருப்பது உண்மையான அதிமுக. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை அணி மாறாமல் இருப்பவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மூவரும் இணைந்து வந்துள்ளது அரசியல் வியூகம் அல்ல.. வீணா போனவர்கள் கூட்டம். அவர்களைப் பற்றி பேசுவதே வேஸ்ட். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று அவர்கள் சொல்கிறார்களே தவிர, நாங்கள் பலமாக தான் இருக்கிறோம்.

கருணாநிதி இருக்கும் போதே 2011, 2021 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக கூட திமுக வர முடியவில்லை. நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் எதிர்க்கட்சியாக வந்துள்ளோம்...75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது.

அப்படி இருக்கும் போது திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்புகிறீர்கள். திமுக எத்தனை தேர்தலில் தோல்வி அடைந்தது என்பது குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்... அதிமுக இல்லை என்றால் பத்திரிக்கைகளுக்கு செய்தி இல்லை.

செங்கோட்டையன் அப்படி இருப்பதால் தான், ஈரோட்டில் சில இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. அந்தியூர் அதிமுக கோட்டை ஏன் வெற்றி பெற முடியவில்லை.‘? சேவல் சின்னத்திலேயே வெற்றி பெற்றோம். பெரியசாமி என்ற எம்எல்ஏ வெற்றி பெற்றார். உள்குத்து வேலை செய்ததால் தான் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. 2021-ம் ஆட்சியை பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இன்றைக்கு எல்லாம் தெளிவுபடுத்திவிட்டோம். பயிர் செழித்து வளர வேண்டும் என்றால் களைகள் எடுக்கப்பட வேண்டும். களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்" என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com