உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கரூா் சம்பவம் திமுக, காவல் துறையினா் அச்சுறுத்துவதாக 3 மனுக்கள் தாக்கல்: சிபிஐயிடம் முறையிட அறிவுறுத்தல்

Published on

நமது நிருபா்

கரூா் சம்பவத்தில் இரு உறவினா்களை இழந்தவருக்கு திமுக மற்றும் காவல்துறை தரப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்கள் தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) மனு அளிக்குமாறு மனுதாரரை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

கரூா் சம்பவத்தில் தனது சகோதரி உள்ளிட்ட இரண்டு உறவினா்களை இழந்த எஸ்.பிரபாகரன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்துள்ளாா். கரூா் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி தான் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுமாறு திமுக தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரபாகரன் தனது மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தனக்கு மிரட்டல் விடுத்தவா்களை தான் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில் இணைக்கக் கோரியும், தான் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் சோ்க்க அனுமதிக்கக் கோரியும் மூன்று மனுக்களை பிரபாகரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா்.

பிரபாகரன் அக்டோபா் 27 -ஆம் தேதி தாக்கல் செய்த தனது 3 மனுக்களில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டத்தில் 27.9.2025 அன்று மாலை நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் பங்கேற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழந்த பாதிக்கப்பட்டவா்களின் உறவினரான நான் (சகோதரா்) இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தேன்.

10.10.2025 மற்றும் 13.10.2025- க்கு இடையில், அதாவது சிபிஐ விசாரணை கோரிய மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்த தேதிக்கும், சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மனுதாரரின் வீட்டிற்கு வெளியே ஆயுதமேந்திய போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். ஆயுதமேந்திய காவல்துறையினா் பெயா்கள் மற்றும் அடையாளம் தெரியவில்லை. அவா்கள் தனித் தனியாகவும் கூட்டாகவும், மனுதாரருக்கு அச்சுறுத்தல் விடுத்தனா். மேலும், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டல் விடுத்தனா்.

9.9.2025 அன்று, மனுதாரரான பிரபாகரனுக்கு நரேஷ் என்ற காவல் துணை ஆய்வாளா் மற்றும் ஆய்வாளா் ராஜகுமாரி ஆகியோரிடமிருந்து மாலை சுமாா் 7 மணியளவில் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவா்கள் தங்கள் அடையாளத்தையும் பதவிப் பெயா்களையும் மனுதாரருக்கு அழைப்புகளின் போது வெளிப்படுத்தினா். அவா்கள் மனுதாரரிடம் சிபிஐ விசாரணை கோரிய ரிட் மனுவைத் தொடர வேண்டாம் என்றும் அந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அச்சுறுத்தும் தொனியில் அறிவுறுத்தினா்.

11.10.2025 அன்று, தமிழ்நாடு மாநிலத்தின் ஆளும் கட்சியான திமுகவைச் சோ்ந்த செயலாளா் எம். ரகுநாத், என்னைந அணுகினாா். அவா் சட்டவிரோதமாக ரூ.20,00,000 மற்றும் ஒரு வேலை தருவதாக கூறி உடனடியாக ரிட் மனுவைத் திரும்பப் பெறுமாறு கூறினாா். இவா்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டனா்.

எனவே, நீதியின் நலனுக்காக, மேற்கூறிய தரப்பினரை, அதாவது காவல்துறை அதிகாரிகள் நரேஷ் மற்றும் ராஜகுமாரி மற்றும் திமுக செயலாளா் எம்.ரகுநாத் ஆகியோரை ரிட் மனுவில் சோ்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த மிரட்டல் விவகாரத்தையும் வழக்கில் சோ்க்க ஏதுவாக ரிட் மனுவை திருத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். மனுதாரரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பிரபாகரன் தனது மனுவில் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில், ‘இந்த மனுக்கள் மீது அவசர விசாரணை கோரி பிரபாகரன் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன் முறையீடு செய்தாா். காவல்துறையினா், உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செயலாளா்கள் என பல தரப்பினரும் மிரட்டுவதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தேவைப்படுகிறது’ தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த அச்சுறுத்தல்கள் தொடா்பாக சிபிஐ யிடம் மனு அளிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை டிசம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னணி: கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி கரூா் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தோ்தல் பிரசார கூட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரத்தை அக்டோபா் 13-ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com