

நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்தார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி இன்று (அக். 30) சென்னை வர்த்தக மையத்தில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியைச் சந்தித்து நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக உயர்த்திக் கொள்முதல் செய்திட அனுமதியும் செறிவூட்டப்பட்ட அரிசியைச் சோதனை செய்து, தரச் சான்றினை விரைந்து வழங்கிடவும் ஆவன செய்திட வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'விண்டெர்ஜி இந்தியா 2025' கருத்தரங்கத்திற்காக வருகை தந்திருந்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி சந்தித்து ஈரப்பதத்தை
17% இலிருந்து 22% ஆக அதிகரித்து நெல் கொள்முதல் செய்திடவும் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலப்பதற்கான தரச்சான்றினை விரைந்து வழங்கிட ஆவன செய்திடக் கேட்டுக் கொண்டதோடு சில கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுகோள் விடுத்தார்கள்.
அமைச்சரின் மனுவில் உள்ள கோரிக்கைகள்:
2016 முதல் 2021 வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூபாய் 973 கோடி ரூபாயை வழங்கல்!
2010-11, 2013-14 & 2014-15 ஆண்டுகளுக்கான அரிசிக்காக இறுதி செய்யப்பட்ட விலை (Final Economic Cost) முன்மொழிவினை ஏற்று அதற்கான தொகை வழங்குதல்!
நெல்லைக் காய வைக்கும் இயந்திரங்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கிட உதவி செய்தல்!
மேலும், அக்டோபர் - டிசம்பர் 2025 மாதங்களுக்கான மானியத் தொகையில் ரூபாய் 1745.66 கோடி வழங்கிட அனுமதி அளித்ததற்காக மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.