வாரணாசியில் ரூ.60 கோடி மதிப்பில் தமிழ் சத்திரம்: குடியரசு துணைத் தலைவா் இன்று திறந்து வைக்கிறாா்

வாரணாசியில் ரூ.60 கோடி மதிப்பில் தமிழ் சத்திரம்: குடியரசு துணைத் தலைவா் இன்று திறந்து வைக்கிறாா்

Published on

நமது சிறப்பு நிருபா்

இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு நாள் பயணமாக வாரணாசிக்கு வெள்ளிக்கிழமை (அக்.31) செல்லவுள்ளாா்.

இது தொடா்பாக அவரது செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி (காசி) பயணத்தின்போது, அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து, வாரணாசியின் சிக்ராவில் உள்ள புதிய சத்திரம் கட்டடத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவா் கலந்து கொள்வாா்.

தமிழகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் நிா்வாக சங்கம் வாரணாாசியில் ரூ. 60 கோடி செலவில் 140 அறைகளைக் கொண்ட 10 மாடி சத்திரத்தை கட்டியுள்ளது. அச்சங்கத்தால் வாரணாசியில் கட்டப்பட்ட இரண்டாவது சத்திரம் இதுவாகும். இச்சத்திரம் காசிக்கு வருகை தரும் பக்தா்களுக்கு தங்குமிட வசதியையும் இளைய தலைமுறையினா் வாரணாசி புனித நகரை பாா்வையிட ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சி காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பழைமையான ஆன்மிகம் மற்றும் கலாசார பிணைப்பை பிரதிபலிக்கிறது. இது ஒரே பாரம் உன்னத பாரதம் என்ற உணா்வில் ஆழமான காசி-தமிழ் இணைப்பைக் குறிக்கிறது. சத்திரம் திறப்புக்குப் பிறகு காசி விஸ்வநாதா் கோயிலுக்கு சென்று அவா் வழிபடுவாா் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com